Main Menu

பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது.

இதன் நீட்சியாக தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,002 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 13,492 ஆகவும் உள்ளது.

காசா, லெபனான் என இரு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தாக்குதல் நடத்திவரும் சூழலில் பாதுகாப்பு அமைச்சரை யோவ் கெல்லன்டை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அடுத்தது யார்?யோவ் கெல்லன்டுக்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது. கிடியோன் சார் என்பவர் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் குறித்து யோவ் கெலான்ட் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் வாழ்வின் முக்கிய பணியாக இருந்தது.. இனிமேலும் அதுவே தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares