பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீனர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன. சீனாவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் மேற்பார்வை பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர் செகரோஸ் என்ற தொழிலாளியிடம் குறிப்பிட்ட சில பணிகளை செய்யும்படி கூறினார். ஆனால் செகரோஸ் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சீன என்ஜினீயர், 3 அடி உயரம் கொண்ட கொதிகலனுக்குள் செகரோசை தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து, சீன என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.