இன்று வானில் தென்படவுள்ள நவம்பர் மாத முழு நிலவு – சூப்பர் மூன் எனும் அபூர்வக் காட்சி
இந்த வாரம் நவம்பர் மாதத்திற்கான முழு நிலவைச் சூப்பர் மூனாகக் காணும் வாய்ப்பு உலக மக்களுக்குக் கிடைத்துள்ளது.
EarthSky இணையத்தளத்தின் தகவலின்படி, இந்தச் சூப்பர் மூன் இன்று (24) இலங்கை நேரப்படி இரவு 8.24-க்கு முழுமையான நிலையை அடையவுள்ளது.
இந்த ஆண்டில் தோன்றிய மிகச் சிறிய முழு நிலவுடன் ஒப்பிடுகையில், இன்றைய சூப்பர் மூன் சுமார் 17 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக ஒளியுடனும் தென்படும் என நாசா தெரிவித்துள்ளது.
‘பீவர் மூன்’ (Beaver Moon) என அழைக்கப்படும் இந்த முழு நிலவு, தொடர்ந்து தோன்றவுள்ள மூன்று சூப்பர் மூன்களில் முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலப்பகுதியில் முழு நிலவு தோன்றும்போது, அது வழக்கத்தைவிடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளிப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது.
இந்த வானியல் நிகழ்வை விசேட உபகரணங்கள் எதுவுமின்றி வெறும் கண்களால் பார்வையிட முடியும்.
குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நிலவு அடிவானத்திற்கு அருகில் தென்படும் நேரமே இதனைப் பார்வையிடுவதற்கு மிகவும் சிறந்த தருணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இந்த ஆண்டின் மிகப்பெரியதும் பிரகாசமானதுமான சூப்பர் மூன் எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி தென்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 2027ஆம் ஆண்டின் முதலாவது சூப்பர் மூன் ஜனவரி 22ஆம் திகதி தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
