பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு கட்டாயமாக கடை பிடிக்கப்படுகிறது.
அந்த பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோக், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும், கானாவும் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் ‘விசா’ காலத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் தங்களது குடிமக்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கான ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அது வழக்கம்போல் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தங்களது குடிமக்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்க சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
‘விசா’ காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கி இருக்கும் தனது குடிமக்களை சில ஆண்டுகளாக தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.