வவுனியாவில் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் மனு
வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த மதகுருமார் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி அவர்கள் அரச அதிபர் மற்றும் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
குறித்த மக்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், பாகிஸ்தானில் இருந்து இரகசியமாக அழைத்து வந்தவர்களின் விபரத்தை வெளியிடுமாறும், அவர்களை பார்வையிட அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், யார் இவர்களை அழைத்து வந்தார்கள் என கேள்வியெழுப்பிய மதகுருமார், இவர்களூடாக ஐ.எஸ். உறுப்பினர்கள் நாட்டுக்குள் உள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.