பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.
இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.