பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிக்க மாட்டோம்
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிப்பதற்கு யார் அழுத்தம் கொடுத்தாலும் விடுவிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது பாதுகாப்புச் செயலாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
.நாட்டின் மீது திடீர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் ஆபத்து 99 சதவீதத்தால் முடிவிற்கு வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் நீண்டகாலத் திட்டமொன்றை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்கள் 2014ஆம் ஆண்டு முதல் பதிவாகியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துதல்,வெளிநாடுகளுடனான புலனாய்வு தகவல்களை மேம்படுத்துதல், தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்துதல், கைதானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் உட்பட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அண்மையில் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை செயற்பாடுகளுடன் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளமை பற்றிய தகவல் கிடைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அடிப்படைவாத குழு தொடர்பான தகவல்களை வழங்கும் போது உளவுப் பிரிவுகளிடமிருந்து எதுவித தாமதமும் ஏற்படவில்லை. உளவுப் பிரிவின் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டமைக்காக ஒட்டுமொத்த உளவுப் பிரிவும் சீர்குலைவதற்கு எதுவித வாய்ப்பும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புக் குழு ஒவ்வொரு புதன்கிழமையும் கூட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்துவது நல்ல விடயமாகும். வெளிநாட்டவர்களிடமிருந்து இலங்கையர்களுக்குக் கிடைக்கும் பணம் மற்றும் அவை பயன்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். தேசிய உளவுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் அங்கு சாட்சியமளிக்கையில், பாதுகாப்புச் சபை ஒழுங்கான முறையில் ஒன்றுகூடவில்லை என குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சம்பவம் குறித்து தான் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு தெளிவுபடுத்தியதாகவும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.