நீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது
எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் தடை நீங்கி தணிக்கை செய்யப்பட்டது.
‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை குழு படத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுசீரமைப்பு குழுவுக்கு அனுப்பியது.
படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான மறு சீரமைப்பு குழு எந்த காரணமும் சொல்லாமல் மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதித்தனர். மறு சீரமைப்பு குழு மறுப்பு தெரிவித்தால் டெல்லி கோர்ட்டுக்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.
ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2வது மறு சீரமைப்பு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டது. இதிலும் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் படக்குழு கோர்ட்டை அணுகியது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டது தற்போது படத்துக்கு சென்சாரில் `யு’ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:-
பல போராட்டங்களுக்கு பிறகு சென்சார் சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக 3 முறை மறுக்கப்பட்டு பின்னர் கோர்ட்டு உத்தரவு மூலம் சென்சார் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளையும் பேசும் படமாக மெரினா புரட்சி இருக்கும். இதில் என் கற்பனை எதுவுமே இல்லை.
இங்கு சென்சார் தரப்படாவிட்டாலும் உலகில் 9 நாடுகளில் தமிழர்கள் திரையிட்டு பார்த்தார்கள். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஏமன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் திரையிட்டு இருக்கிறோம். இன்னும் பல நாடுகளில் திரையிடப்பட இருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது’.
இவ்வாறு அவர் கூறினார்.