நான் சன்னியாசியாகவே விரும்பினேன்- பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில், நான் சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன், பிரதமாக நினைக்கவில்லை என கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இன்று காலை பிரத்யேகமாக பேட்டி அளித்தார். இதில் அக்ஷய் குமாரின் பல்வேறு அரசியல் அல்லாத தனிப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி கூலாகவும், சுவையாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
எதிர்கட்சிகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மம்தா பானர்ஜி ஒவ்வொரு ஆண்டும் 2 குர்தாக்கள் எனக்கு அனுப்புகிறார்.இதேப்போல் ஷேக் ஹசீனா எனக்கு இனிப்புகள் அனுப்புவார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எனக்கு மிக நெருங்கிய நண்பராவார். என் உடல் நலன் குறித்த கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார்.
நான் ஒருபோதும் பிரதமராவேன் என நினைத்ததில்லை. ஏனென்றால் நான் மிகப்பெரிய அரசியல் பின்னணியுடன் வரவில்லை. சிறந்த சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன். மேலும் நான் அனைவரிடமும் மரியாதையாகவும், கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையோடும் தான் இருப்பேன்.
என்னிடம் பணிப்புரியும் யாரிடமும் நான் கோபத்தை காட்டியதில்லை. எனது கோபத்தினை காட்ட வாய்ப்பே கிடைத்ததில்லை. எனவே மக்கள் என்னை கண்டு ஆச்சரியமடைகின்றனர். நான் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். ஆனால் அதிக கண்டிப்புடன் இருக்க மாட்டேன். நான் முதல்வரானபோது செய்த பணிகளில் எனக்கு கிடைத்த அனுபவம் தான், பிரதமரான போது பெரிதும் உதவியது.
நான் முதல்வர் ஆவதற்கு முன்பு வரை என்னிடம் வங்கிக்கணக்கே கிடையாது. நான் குடும்பத்தை விட்டு இளம் வயதிலேயே வெளியேறிவிட்டேன். தீமையை விட நன்மைக்கு வலிமை அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.