நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குங்கள் – மனோ கணேசன் வலியுறுத்து
நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை ஆறு நாடுகளில் உள்ள கொரோனா வைரஸ்கள் இங்கே வந்து சேர்ந்துள்ளன என்றும் இதனால் கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால் இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20 ஆயிரம் பேர் வரை மரணிக்கவும் தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனாவுக்கு கொடுங்கள் என அரசாங்கத்திடம் கோரியுள்ள அவர், இல்லாவிட்டால் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று, நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
நாட்டை மூட மறுப்பது ஏன்? என கேள்வியெழுப்பிய அவர், துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றிக்கொள்வதுதான் தேவை என்றால் நாட்டை மூடி, நாடாளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள் எனக் கோரியுள்ளார்.
அடுத்தது, நாட்டை முடக்கினால் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரண தொகை வழங்க முடியவில்லை என்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.