நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்ளது பாதுகாப்பு
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆலய சூழலில் உள்ள வீதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநருக்கு அநாமதேய கடிதம் ஒன்று நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த கடிதத்தில் தனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.