தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் – நாராயணசாமி
தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக சொன்னதை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ராகுல்காந்தியை முழுமையாக ஆதரித்து கட்சியை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினோம்.
உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் தேர்தல் முடிவு குறித்து அறிய சில காலம் ஆகும். அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களித்து உள்ளனர். தென் மாநிலங்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது தான் இந்த தோல்விக்கு காரணம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனை வட மாநில தலைவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் செல்வோம். கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. கிரண்பெடி எல்லா திட்டங்களையும் தடுத்து நிறுத்தியதால் அதன் எதிரொலி தேர்தலில் இருந்தது.
மாநில வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து பிரதமருடன் இணக்கமாக இருக்கிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்வதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த காலத்தில் பிரதமர் சொன்னார். ஆனால் மாநிலத்தில் சுயாட்சி தரவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் மூலமாக தொல்லை தந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.