துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை – கப்ரால்
துறைமுக நகரம் ஒரு “சீன காலனியாக” மாறும் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட குறித்த சட்டம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு ஒரு திருப்புமுனையாக கருதுவதாகவும், நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உள்ளூர் சட்டங்களின் கீழ் இணங்குவதை உறுதி செய்வதற்கு போதுமான பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
துறைமுக நகர ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு பரந்த அளவிலான அதிகாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டிருப்பதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார்.
இலங்கையின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விகிதம் 98% ஆக உயர்ந்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் அதிக கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் துறைமுக நகரத்தின் பொருளாதார திட்டம் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே குறித்த சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானது என தாங்கள் நம்பவில்லை என்றும் உயர் நீதிமன்றமும் அதை அவதானிக்கும் என நம்புவதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார்.