Main Menu

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாய முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் கட்டாய தொழிலாளர்களாக்கிய செயற்பாட்டில் பங்கேற்றனர் என அடையாளப்படுத்தப்பட்ட  சீன அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் செயல்படாததால் இச்செயற்பாடு அவசியம் என வழக்கறிஞர் குல்டன் சோன்மேஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 50,000 உய்குர்களுடன் துருக்கியர்கள் இன, மத மற்றும் மொழியியல் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மத்திய ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய உய்குர் புலம்பெயர்ந்தோர் துருக்கியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் துருக்கியில் உள்ள சீன தூதரகத்தில் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகிய போதும் வழக்கறிஞர் அலுவலகம் அதுதொடர்பில் கோரியபோதும்  உடனடியாக பதிலளிக்கவில்லை.

இதேநேரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே உய்குர்கள் குறித்த விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ளது, இதனால் அச்செயற்பாடு இடம்பெறவில்லை என வழக்கறிஞர் சோன்மேஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அவர் நீமன்ற வளாகத்திற்கு வெளியில் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமிருந்தபோது அவரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட காணாமல்போன உயர்குர் இனத்தவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும், சீன அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அழைப்பு விடுக்கும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.

சீனா ஆரம்பத்தில் உய்குர்களை கொண்ட முகாம்கள் இருப்பதை மறுத்தது, ஆனால் பின்னர் அவை தொழிற்கல்வி மையங்கள் என்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியதோடு அங்கு இடம்பெற்றதாக கூறப்படும் அத்தனை துஷ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

முன்னதாக, சில துருக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆட்சியில் உள்ளவர்கள் சீனாவுடன் தமது பிற நலன்களுக்கு ஆதரவாக செயற்பட்டமையால் உய்குர்களின் உரிமைகளை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் ‘உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் சம குடிமக்களாகவும் அமைதியாகவும் வாழ்வது எமக்கு முக்கியமானது’ என்று கூறினார், ஆனால் துருக்கி சீனாவின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகவும் கூறினார்.

முக்கியமாக உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், சமீபத்திய ஆண்டுகளில் ஷின் ஜியாங்கில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன.