துபாயில் படைப்புத்திறன் மாவட்டம் – ஆட்சியாளர் அறிவிப்பு
துபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்துபாய்:
துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துபாயில் இன்று (அதாவது நேற்று) புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது. படைப்புத்திறன் பொருளாதாரத்தின் தலைநகராக உலக அளவில் துபாயை உருவாக்கும் விதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த படைப்புத்திறன் மாவட்டத்தில் துபாய் கலை மற்றும் கலாசார ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மேற்பார்வை பணிகளை மேற்கொள்வார். அதன் விரைவான வளர்ச்சியை அனைவரும் விரைவில் காணப்போகிறோம். துபாயின் படைப்பாற்றலை தடையில்லாமல் இந்த நகரம் கொண்டு செல்லும்.
இதன் மூலம் ஆக்கப்பூர்வமான படைப்புகளை தயாரிக்கும் அல்லது உருவாக்கும் 8 ஆயிரம் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அங்கு பணியாற்றும் 70 ஆயிரம் படைப்பாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரம் பேராக உயரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியதாவது:-
துபாயில் உலகம் முழுவதிலும் உள்ள படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு சேவை அளிப்பதற்கான ஒருங்கிணைந்த பகுதியாக அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டத்தை இன்று (அதாவது நேற்று) உருவாக்கியுள்ளோம். சிறந்த திறமையாளர்களுக்கு அவர்களின் படைப்புகளை உருவாக்க சிறப்பு பகுதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்கள் நிறுவனங்களை புதிதாக நிறுவவும் வாய்ப்புகளை அளிக்கிறோம்.
அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டமானது துபாயின் முன்னேற்றத்தின் புதிய படியாகும். மேலும் இது உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கான தளமாக செயல்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.