துணை நடிகர்கள் – பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்!
ராமநாதபுரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த முன்னாள் எம்.பி-யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5-ம் தேதி பிறந்த முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ், கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோஷன், ஹாரிக் ரோஷன் என்ற மகன்கள், தானவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 2009-ல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இதன் பின்னர் தி.மு.க-வில் இருந்து விலகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு தேர்தல்களின்போது அ.தி.மு.க-வின் வெற்றிக்காக உழைத்தார்.
தற்போது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக போகலூரில் பிரசாரம் செய்துவிட்டு வீடு திரும்பினார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் அன்றைய தினம் மதியம் விருந்து சாப்பிட்டார். இந்நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கெனவே உயிர் இழந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ரித்திஷ் உடலுக்குத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அ.அன்வர் ராஜா எம்.பி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ரித்தீஷின் மறைவு செய்தியை அறிந்த ஏராளமான துணை நடிகர்கள் சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்து ரித்தீஷின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் ராதாரவி, மனோபாலா, சின்னிஜெயந்த், ஆர்.ஜே. பாலாஜி, மயில்சாமி, சூரி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் ரித்தீஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் பொருளாளர் நடிகர் கார்த்தி, ரித்தீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சிலர் நடிகர் சங்கத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5.45 மணியளவில் ரித்தீஷின் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடி கிராமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நகைச்சுவை நடிகர்கள் விஜய் கணேஷ், போண்டா மணி, சுப்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து துணை நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே ரித்தீஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.