Main Menu

தி.மு.க., பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க..வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 10.35 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார்கள். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 82 பேரில் 81 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட செயலாளர்களான ஜெயக்குமார், பால கங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ். தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, ஆதி ராஜா ராம், கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக், மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாவட்டம் வாரியாக எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை வைத்து அனைத்து பதவிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும் என்றும், தி.மு.க. பா.ஜ.க.வை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என்றும், நீங்கள் அனைவரும் (மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்) கட்சிப் பணியில் கவனம் செலுத்துங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை பற்றி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம் என்கிற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிச்சயம் புதிய கூட்டணி அமையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு இருப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் தி.மு.க. கூட்டணி உறுதியுடன் இருப்பது போல தெரிகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து ஜெயக்குமார் கூறுகையில், “பழைய வரலாறுகளை புரட்டி பார்த்தால் கூட்டணி கணக்குகள் உங்களுக்கு புரியும். நாளை எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது, சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்களே இருப்பதால் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன் என்று தொடர்ந்து கேட்கிறீர்கள். விமர்சனம் செய்யும் அளவுக்கு எங்கள் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. அ.தி.மு.க. தலைவர்கள் மக்கள் போற்றும் ஆட்சியை தான் இதுவரை வழங்கி உள்ளனர். தி.மு.க. அரசை அனைவரும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் மாறி மாறி பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. நிச்சயம் படுதோல்வி அடையும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

எங்கள் கட்சியின் தலைவி மீது தி.மு.க. பொய் வழக்குகளை போட்டி ருந்தது. அதில் இருந்து அவர் விடுதலையாகி விட்டார் என்பதை சீமான் புரிந்து கொண்டு பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...
0Shares