Main Menu

எல்லை தாண்டியதாக கைதான ராமேசுவரம் மீனவர்கள் 16 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மீனவர்கள் மீன் பிடித்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் மீனவர்கள் அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர். இருந்தபோதிலும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று 16 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வருகிற 20-ந்தேதி காவலை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 61 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares