தியாகி திலீபனின் நினைவாக நடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடுசெய்தவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்குதமிழ் தூபிக்கு முன்பாகவிருந்து நல்லூர் வரையிலும் நடைபயணமொன்றை முன்னெடுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நடைபயணத்தினை நிறுத்துமாறு அதன் ஏற்பாட்டாளர்களிற்கு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கான தடை உத்தரவினை கோரி வவுனியா பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக குறித்த நடைபயணத்திற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், அந்த நடைபயணம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...