தலைவலியால் அவதிப்பட்ட பெண்ணின் மூளையில் புழுக்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் தலைவலிக்கு அவர் மூளையில் இருந்த இளம் புழுக்களே (Larvae) காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
25 வயதான அந்தப் பெண், ஒரு வாரத்திற்கும் மேலாகத் தலை வலியால் அவதிப்பட்டார். அவரது கண் பார்வையும் மங்கலாகத் தொடங்கியது.
ஸ்கேன் செய்த பின், கட்டியால் வலி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், அந்தக் கட்டியை அகற்றிய பின் தான், அது இளம்புழுக்கள் என்று தெரிய வந்தது.
அவரை ஆய்வு செய்த குழு, அவரது மூளையில், இளம் புழுக்கள் இடம் எடுத்துக்கொண்டதே தலைவலிக்குக் காரணம் எனத் தெரிவித்தது.
Neurocysticercosis எனப்படும் அந்த நோய் வயிற்றுப் புழுக்கள் கொண்ட ஒருவரது மலத்தில் உள்ள முட்டைகளை விழுங்குவதால் ஏற்படக்கூடியது என்று அமெரிக்க நோய்த்தடுப்பு நிலையம் கூறுகிறது.
அது மிகவும் ஆபத்தானது, நரம்புத் தளர்ச்சியையும், வலிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.
அந்தப் பெண், வெளிநாடுகளுக்குச் சென்றதே இல்லை. அதனால், அவரே, ஆஸ்திரேலியாவிற்குப் பூர்விகமான முதல் நோய்ச் சம்பவம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன், அந்த நோய் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர்களிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது