தற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..! வௌியான விபரம்
கொழும்பில் அமைந்துள்ள சங்ரில்லா மற்றும் சின்னமன் ஆகிய நட்சத்திர உணவகங்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட சகோதரர்கள் இருவரின் புகைப்படங்களை டெய்லிமெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.
இல்ஹாம் இப்ராஹிம் என்ற நபர் சங்ரில்லா உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இன்ஷாப் இப்ராஹிம் என்பவர் சின்னமன் கிராண்ட் உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் மேற்கொண்ட தாக்குதலில் 8 பிரித்தானியர்கள் உள்ளிட்ட 41 வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்ஹாம் இப்ராஹிம் மற்றும் இன்ஷாப் இப்ராஹிம் ஆகிய சகோதரர்கள் இருவரும் தெமட்டகொடை பகுதியில் வசிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவரின் புதல்வர்களாவர்.
பிரபல வர்த்தகரான குறித்த நபர் வர்த்தக விருது ஒன்றினை பெற்றுக்கொண்டவர் என்பதோடு, வர்த்தக விருது வழங்கும் நிகழ்விற்கு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் இப்ராஹிம் உடன் வருகை தந்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இன்ஷாப் இப்ராஹிம் என்ற தற்கொலை குண்டுதாரி போலியான பெயர் மூலம், வர்த்தக நடவடிக்கைக்காக தாம் வருகை தந்துள்ளதாக உணவக பதிவாளர்களுக்கு தெரிவித்து சின்னமன் கிராண்ட் நட்சத்திர உணவகத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
எந்தவித அச்சமும் இன்றி இன்ஷாப் இப்ராஹிம் உணவகத்திற்குள் பிரவேசித்துள்ளதோடு அவருடன் மற்றுமொரு நபரும் பாரிய பயண பொதி ஒன்றினை சுமந்தவாறு வருகைதந்துள்ளார்.
உணவகத்திற்குள் வருகை தந்த இருவரும் மின்னுயர்த்தியில் (லிப்ட்) உரையாடியவாறே இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளனர்.
இரண்டாவது அடுக்கிற்குள் பிரவேசித்த குறித்த இருவரும் வெவ்வேறாக பிரிந்து சென்றதுடன் அதிகமாக வாடிக்கையாளர்கள் உணவு உட்கொள்ளும் பகுதிகளுக்கு சென்று அமர்ந்துள்ளனர்.
இன்ஷாப் இப்ராஹிம் என்ற தற்கொலை குண்டுதாரி உள்ளிட்ட மற்றுமொரு குண்டுதாரியும் உணவகத்திற்குள் பிரவேசித்து சில நிமிடங்கள் அங்கு காலை உணவு உட்கொண்டவர்களை அகலவிழிகொண்டு அவதானித்ததன் பின்னர் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர்.
பின்னர் நாற்காலிகளில் அமர்ந்தப்படி முன்னும் பின்னுமாக நாற்காலிகளை நகர்த்தி சில நொடிகளில் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர் என சி சி ரீவி கெமரா கருவிகளில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.