தமிழகத்தில் இன்று முதல் இலத்திரனியல் அனுமதி கட்டாயம்
தமிழகத்தில் ஒரு மாட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இலத்திரனியல் அனுமதி (இ-பாஸ்) கட்டாயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து நேற்று ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, வாகன போக்குவரத்துக்கு மண்டல முறை அமுலில் உள்ளதால், மண்டலங்களின் ஏனைய மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக மாவட்ட ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும் எனவே, வாகன போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்துக்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, ஏனைய மாவட்டங்களில் இருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்த இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வாகன போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்
பகிரவும்...