தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. இவரும் அருண்குமார் என்ற வாலிபரும் 31.10.2018 அன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சட்ட சிக்கல்கள் மற்றும் ஆன்லைன் பதிவு குளறுபடி காரணமாக அவர்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியவில்லை.
இது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர்களது திருமணத்தை சட்டப்படி பதிய தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர்கள் இருவரும் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று வந்து தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் திருநங்கையின் திருமணம் பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.