தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி -கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர். எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டு கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை நாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள். எங்களை வாழ்த்துங்கள்! கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.