டிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்
டி.வி.யை ஓடவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 43,722 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 35 முதல் 74 வயது வரையிலான பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? டி.வி.யை ஓடவிட்டு தூங்குவீர்களா? அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா? என கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் இருட்டு அறையில் தூங்கும் பெண்களை விட டி.வி.யை ஒட விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தனர்.
டி.வி.யில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் தாக்கத்தை ஏற்படுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.
இதன் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை ‘ஜமா’ இண்டர்நேஷனல் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.