ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல், அமலாபால்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா, ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்.
கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதொடராக இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சசி லலிதா படத்தில் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். மும்பை சென்று கஜோலை சந்தித்து கதையை கூறிவிட்டு வந்துள்ளார்.
சசிலலிதா படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அமலா பால் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பாரா என்பது இனிதான் தெரியும்.