சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.
இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரியை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.
ஏற்கனவே இதுகுறித்து பேச சீன பிரதிநிதி விரைவில் வாஷிங்டன் வர இருக்கிறார். இந்த நிலையில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து டிரம்ப் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.