சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு மாநாடு ஆரம்பமாகிறது
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான 8ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 24ஆம் திகதி சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு ஒத்துழைப்புக்கள் உருவான 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இந்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து சீன வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் லுவோ ஸாவ்ஹுய் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
“சீன ஜனாதிபதி ஷி ஜின்-பிங் தனித்தனியாக தென்கொரிய மற்றும் ஜப்பானிய தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். சீனப் பிரதமர் லீ கெச்சியாங் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
மேலும், சீனா, ஜப்பான், தென்கொரிய தொழில் மற்றும் வணிக மாநாட்டில் கலந்துகொண்டு குறித்த நாடுகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்கள்.
இந்த உச்சி மாநாடு மூலம், மூன்று நாடுகளுக்கும் இடையேயான தூரநோக்குத் தொடர்பை மேம்படுத்தி, முத்தரப்பு ஒத்துழைப்புக்கான எதிர்கால வளர்ச்சிப் பாதையைக் கூட்டாக அமைக்க வேண்டுமென சீனா விரும்புகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.