சிறுநீரகத்தில் கல் உருவானால், மீண்டும் உருவாகுவதற்கான சாத்தியம்!
சிறுநீரகத்தில் கல் உருவாகுவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்னைதான். இதில் பலரும் அறியாதவகையில் இந்தியாவில் 12 சதவீத மக்கள் சிறுநீர்ப்பாதைக் கல் உருவாவதிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி சிறுநீரக சிறப்பு மருத்துவர் விளக்குகிறார்.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்ப்பாதை போன்று அந்தந்த இடத்திற்கேற்றவாறு கல் உருவாகுவதை Renal lithiasis, Nephrolithiasis மற்றும் Urolithiasis என அழைக்கப்படுகிறது. பொதுவாக சிறுநீரகக்கல் உருவாகுவது பெண்களைவிட, ஆண்களுக்கு அதிகம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்த பாலின இடைவெளியைக் குறைப்பதாகவே சொல்கின்றன.
ஒருவருக்கு சிறுநீரகக்கல் உருவாகுவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. வயது, பாலினம் மற்றும் பாரம்பரியம் போன்ற உட்புற காரணிகள் அவற்றில் பொதுவானவை. ஒரு நாட்டின் அதி வெப்பமான பருவநிலை சிறுநீரகக்கல்லை உருவாக்குவதில் புறக்காரணியாகிறது.
உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது, மாமிசப்புரதம் மற்றும் தண்ணீர் குறைவாக அருந்துவது போன்ற சில நடைமுறை பழக்க வழக்கங்கள் மட்டுமல்லாது, தற்போது உடல்பருமனும் முக்கிய காரணமாவதாக பல ஆய்வறிக்கைகள் சொல்கிறது. அதிகப்படியான கால்சியம் படிவதாலும் சிறுநீரகக்கல் உருவாகலாம்.
சிறுநீர் பாதையிலிருந்து சிறுநீரகம் வரை எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுநீரகத்திற்குள் இருக்கும் கல் பெரியதாக வளரும் வரை நோயாளிக்கு எந்தவிதமான அறிகுறியும் தெரியாமல் இருக்கும். ஒரு நாள் திடீரென சிறுநீர்ப்பதைக்குள் சென்றுவிட்டால் நோயாளியின் பிறப்புறுப்பின் பக்கவாட்டில் சேர்ந்து திடீரென கடுமையான வலி ஏற்படுகிறது.
இந்த வலியை Renal Colic என்கிறோம். மேலும், சிறுநீரோடு ரத்தம் சேர்ந்து வெளியேறுவதற்கு Hematuria என்று பெயர். சிறுநீர் வெளியேறுவதை கல் தடுப்பதால் வலியும், ரத்தப்போக்கும் ஏற்படுகிறது. இதோடு சிறுநீரகத் தொற்றும் சேர்ந்து கொள்ளும்போது காய்ச்சல் வரும். சிறுநீரகப்பையில் உருவாகும் கல்லினாலும் வலி, சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகளும் வருகிறது.
ஒரு நோயாளி கடுமையான வலியோடு வரும்போது பொதுவாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்து கல்லின் அளவு, அது இருக்கும் நிலை போன்றவற்றை துல்லியமாக கண்டறிந்து பின்னர் சிகிச்சை கொடுப்போம்.
கல் சிறியதாக இருந்தால் தண்ணீர் அதிகமாக குடித்து சிறுநீர் வெளியேறுவதன் மூலமாகவோ, சிலநேரங்களில் மருந்துகள் மூலமாகவே தானாகவே வெளியேற வாய்ப்பிருக்கிறது. கல் பெரியதாக இருக்கும் போதோ அல்லது கடுமையான தொற்று ஏற்பட்டிருக்கும்போது மட்டுமே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவோம்.
முன்பெல்லாம் திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றப்பட்டதால் அதிலிருந்து குணமடைய நீண்ட மீட்பு நேரம் தேவைப்பட்டது. ஆனால், தற்போது எந்த அளவிலான கற்களையும் எண்டாஸ்கோப்பி தொழில்நுட்பம் மூலம் எந்தவிதமான அடையாளம் இல்லாமல், குறைவான மீட்பு நேரத்தில் அகற்றிவிட முடியும்.
ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பாதையில் கல் உருவானால், அடுத்த 5 ஆண்டுக்குள் மீண்டும் உருவாவதற்கான சாத்தியம் 50 சதவீதம் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனால் ஒரு முறை கல் அகற்றப்பட்டவர் தொடர்ந்து மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது, சரியான உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பது போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் மீண்டும் சிறுநீரகக்கல்
உருவாகுவதை தடுக்க முடியும்.