சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹாரா (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.
போட்டியின் ஆரம்பத்தில் சிந்து தொடர்ந்து தவறுகளை செய்ததால் பின்தங்கினார். குறிப்பாக நெட்டில் பந்தை அடிப்பது, அவுட்லைனுக்கு வெளியே அடிப்பது போன்ற தவறுகளால் புள்ளிகளை இழந்தார். சில சமயம் பொறுமையிழந்து அவசரப்பட்டு ஆடுவது போல் தெரிந்தது. இதனால் முதல் செட்டை 7-21 என இழந்தார்.
2வது செட் ஆட்டத்தில் சிந்து சற்று நிதானமாக ஆடி, ஒகுஹாராவுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றார். ஆனாலும், ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒகுஹாரா, அடுத்தடுத்து 6 புள்ளிகளைப் பெற்று முன்னேறினார். இறுதியில் அந்த செட்டையும் 11-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். வெற்றி பெற்ற ஒகுஹாரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பி.வி.சிந்துவும், ஒகுஹாராவும் இதுவரை 13 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் 7 போட்டிகளில் சிந்துவும், 6 போட்டிகளில் ஒகுஹாராவும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக மோதிய இரண்டு போட்டிகளில் சிந்து வெற்றி பெற்றார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஒகுஹாராவின் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தது.
மற்றொரு அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தாய் சு யிங், 15-21, 24-22, 21-19 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஒகுஹாரா, திய் சூ யிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.