Main Menu

சவுதி எண்ணை வயல் மீது வான்தாக்குதல் எதிரொலி – எரிபொருள் விலை துரித அதிகரிப்பு!

சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான அரம்கோ எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

சவுதியில் மீண்டும் எரிபொருள் உற்பத்தி ஆரம்பமாகும் வரை அமெரிக்காவின் எரிபொருள் சேமிப்பை விநியோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்த பின்னர் விலையில் சிறியளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

சர்வதேச ரீதியாக சவுதி அரேபியா மிகப் பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பீப்பாய்களை அந்த நாடு ஏற்றுமதி செய்கின்றது. தாக்குதலுக்கு பின்னர் அரம்கோ எரிபொருள் நிறுவனத்தில் திரவ எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சவுதியின் சக்திவலுத்துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். இது சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவு என்பது குறிப்பிடத்தக்கது.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அப்கைக் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எரிபொருள் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% உற்பத்தியாகின்றது.

சவுதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தியாகின்றது. எனவே இந்த தாக்குதலால் இன்று (திங்கட்கிழமை) எரிபொருள் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஈரான் ஆதரவு பெற்ற, யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ ஈரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது யேமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் வன்மையாக மறுத்துள்ளது.

அமெரிக்கா தங்கள் மீதும் வஞ்சம் வைத்தும் குற்றம் சுமத்துவதாகவும், “ஈரான் மீது குற்றம் சுமத்துவதால் யேமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது,” என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...