சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் அவை வரவேற்கப்பட வேண்டியதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில், நேற்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதியின் ஊடக பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட மக்கள் தொடர்பாடல் நிகழ்வில் கலந்து கொண்டு, தொடர்பாட்டளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த போது ,
கிராமங்கள் ரீதியாக மக்கள் வலையமைப்புக்களை ஒன்றிணைத்து கிராமங்களில் இருந்து தொடர்பாடல் வலையமைப்புக்கள் இதன் மூலம் வலுவாக்கப்பட்டுள்ளது.
உயர் மட்டங்களில் இருந்து தகவல்களை வழங்குவதோடு, கிராமங்களில் இருந்தும் மக்களின் தொடர்புகளிநூடாக தகவல்களை பெற்று செயற்பாடுகளை மேற்கொள்வது கிராமத்தின் பலம் மட்டுமல்லாது,எமது தேசத்தின் பலமும் கூட.
நமது முன்னேற்றத்திற்கும் பொருளாதார ரீதியாகவும் பெரும் தடையாக இருந்த போதை பொருளை ஒழித்து சட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பது எமது சந்ததியினர் பாரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கிராம சக்தி செயற்திட்டமும் வறுமை ஒழிப்பின் ஓர் அங்கமாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மிகவும் பொருந்த கூடிய சக்தி மிக்கதொரு செயற் திட்டமாகும்.
கல்வியில் நாம் பின்னடைவை எதிர்நோக்கவில்லை ஆனாலும் எம்மை விட பலர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனவே இழந்தவற்றை மீள அடைவதற்கும் பொருளாதார ரீதியாக எமது பிரதேசத்தை முன் நோக்கி நகர்த்த சிறந்த தொடர்பாடல்களும் இன்றியமையாதது.அதற்கான ஆளுமைகளையும் திறமைகளையும் நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
விவசாயம்,மீன்பிடி, போன்ற துறைகளிலும் நாம் வலிமை அடைய வேண்டும்.
தொலைந்து போன எமது அடையாளங்களை, பண்பாடுகளை, கல்வியினை மீண்டும் மிளிர செய்ய வேண்டும். அதற்காக தான் நமது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் பல்வேறு வலையமைப்புக்கள் ஊடாகவும் தேசிய செயற்திட்டங்கள் ஊடாகவும் மக்களின் ஒவ்வொரு அங்கமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.