சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,
வேலூர் தொகுதியில் சிலர் செய்த சதியின் காரணமாக அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே 39 தொகுதிகளில் தேர்தல் நடந்திருக்கின்றது. அந்த 39 தொகுதிகளில், ஒரேயொரு தொகுதியைத் தவிர்த்து, அதிலும் தேனி தொகுதியை அவர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
எனவே 38 இடங்களில் நம்முடைய அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது.
எனவே நாடாளுமன்றத்தின் தேர்தல் மட்டுமல்ல 22 தொகுதிகளில் நடை பெற்றிருக்கக்கூடிய சட்ட மன்றத்தின் இடைத்தேர்தல். அந்த 22ல் 13 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆளும்கட்சியாக இருக்கக் கூடிய அ.தி.மு.க 9 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லையே, ஆட்சியை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எனவே இது அ.தி.மு.க.விற்கு தானே வெற்றி என்று சொல்லுகின்றார்கள்.
நான் கேட்கின்றேன், சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், 22 இடங்களில் நடைபெற்றது. அந்த 22ல் தி.மு.க வெற்றி பெற்றது 13 இடங்கள், ஆளும் கட்சியான இருக்கக்கூடிய அ.தி.மு.க வெற்றி பெற்றது 9 இடங்கள் 13 பெரியதா, 9 பெரியதா. இந்தக் கணக்கு கூட அவர்களுக்குத் தெரியவில்லையா?
விரைவில் நாம் தான் ஆட்சி பொறுப்பில் அமரப் போகின்றோம் அதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை, ஆட்சிக்கு வர முடிய வில்லையே என்று அதனை கேலி செய்து, தலையங்கங்கள் தீட்டி, ஊடகங்களில் அதனை விவாதப் பொருளாக்கி பேசிக் கொண்டிருக்கக்கூடிய இந்த செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அப்படி விமர்சனம் செய்து கொண்டிருக்கக்கூடிய, அவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லுகின்றேன். கவலைப்படாதீர்கள் உங்கள் கவலையையும் நாங்கள் விரைவில் தீர்த்து வைக்கப் போகின்றோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது தான் இன்றைக்கு இருக்கக் கூடிய உண்மை.
எவ்வளவோ பிரச்சனைகள் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்றது. அந்தப் பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று நான் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை விட்டிருக்கின்றேன். இதுநாள் வரையில் எந்த பதிலும் கிடையாது. இதற்கிடையில் அவர்கள் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கின்றார்கள்.
அங்கு என்ன நடந்தது, அவர்கள் என்ன பேசினார்கள், என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை, அது நமக்கு தேவையுமில்லை, அவசியமும் கிடையாது. சட்டமன்றத்தை ஏன் கூட்டத் தயங்குகிறார்கள். என்ன காரணமென்றால், 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றதை தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101. காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 உறுப்பினர். எனவே, 101யையும், இந்த 8யையும் சேர்த்தீர்கள் என்றால் 109 சட்டமன்ற உறுப்பினர்கள்.
எனவே, சட்டமன்றத்தை கூட்டினால் என்ன ஆகுமோ என்று, கூட்டுவதற்கு பயப்படுகின்றார்கள்.
தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி ஏற்று வைத்து முடித்ததும். பத்திரிகை நிருபர்கள் வெளியில் என்னிடத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்திருக்கிறீர்களே என்ன ஆகும் என்று கேட்டார்கள்? பொறுத்திருங்கள் என்று சொன்னேன். கொடுத்திருக்கின்றோம், என்ன நடக்கின்றது, என்ன நடக்கப் போகின்றது, என்று இப்பொழுது கூட உங்களிடத்தில் நான் சொல்ல மாட்டேன்.
ஆனால், உங்களுக்கு நல்லது நடக்கக்கூடிய, இந்த நாட்டிற்கு நல்லது நடக்கக்கூடிய, நம் இனத்திற்கு நல்லது நடக்கக்கூடிய சம்பவம் நடக்கப் போகின்றது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்புகின்ற வகையில் விரைவில் நடக்கப் போகின்றதா, இல்லையா என்று பாருங்கள்.
எந்த நம்பிக்கையோடு, எந்த எதிர்பார்ப்போடு, தி.மு.க.வின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவினைத் தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றீர்களோ. அதேபோல், சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய அளவிற்கு அந்த வெற்றி வாய்ப்பினை தேடித்தந் திருக்கின்றீர்கள்.
அந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள் அத்துனை பேருக்கும் மீண்டும் மீண்டும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், ஆ.ராசா எம்.பி., ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி திமுக நகர பொறுப்பாளர் வரதராஜன், எம்.பி.க்கள் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன், சுப்புராயன், கணேசமூர்த்தி, சின்ராஜ், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, ஜெயராமகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.