கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 112 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் IX-1344 என்ற விமானத்தின் இரு விமானிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகளும் இரண்டு விமானிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்து தொடர்பாக தனது ருவிற்றர் பதிவில் கவலை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இதுகுறித்து உரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
190 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து!
டுபாயில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் கோழிக்கோட் (Kozhikode) சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிறங்கும்போது, பாதையில் இருந்து விலகி விபத்துகுள்ளாகியுள்ளது.
கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துகுள்ளான விமானத்தில் 184 பயணிகளும், 2 விமானிகள், 4 சிப்பந்திகளும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக டுபாயில் சிக்கித் தவித்தவர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இந்த கோர விபத்தில் விமானி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.