கிளிநொச்சியில் சில குளங்கள் வான் பாய்வதனால் போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவான வெள்ளநீர், வேரவில் கிராஞ்சி வீதியிலேயே காணப்படுகின்றது.
மேலும் இரண்டு இடங்களில் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்துச் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுடைய போக்குவரத்து தேவைகளை கருதி, பூநகரி பிரதேச சபையினால் உழவு இயந்திரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி என்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.