காலநிலை மாற்ற ஆர்ப்பாட்டம்: மத்திய லண்டனில் பலர் கைது
மத்திய லண்டனில் இளஞ்சிவப்பு நிற செயற்கை கப்பலொன்றை வடிவமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்திய லண்டனின் ஒக்ஸ்போர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த கப்பலை வைத்துக்கொண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் உறங்குவதற்காகவும் அந்த கப்பலை பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அங்கு சென்ற பொலிஸார் ஏறக்குறைய அத்தனை பேரையும் கைதுசெய்து கப்பலை அங்கிருந்து அகற்றியுள்ளனர். சுமார் 680 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மெற்ரோபொலிற்றன் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது, ‘ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் படை’ என பொலிஸாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கேலி செய்தனர்.
உலக வெப்பமயமாதலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இம்மாத ஆரம்பத்தில் லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அரை நிர்வாண போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
காலநிலை மாற்றத்தை சமனாக பேணுவதற்கு, உலக நாடுகள் காபன் உமிழ்வை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் பூச்சியம் அளவான காபன் உமிழ்வை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.