காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் – சுர்ஜிவாலா
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் முக்கிய தலைவர்கள் கூடி 3 மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே சி வேணுகோபால், சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருப்பார் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி நேற்று, இன்று, நாளை மட்டுமல்ல, எப்போதுமே அவர் தலைவராக இருப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.