காங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த தோல்வி ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த தோல்வி என பலரும் கூறி வருகின்றனர். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முன்வந்ததாகவும் தகவல் பரவியது. ஆனால், அதனை கட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்ரடி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் சவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தேர்தல் பணியாற்றிய அனைவருமே பொறுப்பு. தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு அல்ல.
தேர்தல் பிரசாரம் என்பது கூட்டுப்பொறுப்பு. ராகுல் காந்தி கடுமையாக தேர்தல் பணி செய்தார். பிரசாரத்தை முன்னால் இருந்து வழிநடத்தினார். மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் உயர் பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் பதவி விலக வேண்டும். புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று நானும் எனது குழுவும்கூட பதவி விலக தயாராக இருக்கிறோம்.
கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் நம்பிக்கையுடன் களப்பணியாற்றினோம். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அசோக் சவான் நான்டட் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதாப் சிக்லிகரிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.