கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்.
எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட்டிலும் 37 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
ஆனால் நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை.
பா.ஜனதா ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை மோடி தன் கைக்குள் போட்டு இருக்கிறார். அவருக்கு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது.
எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அத்துமீறலையும் செய்வார். அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
386 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும். நான் நமது தொண்டர்களுக்கு சொல்வதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான்.
தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. நான் நந்தனத்தில் குடியிருக்கிறேன் எனது வீட்டுக்கு மஞ்சள் மற்றும் ஈஸ்ட் மேன் கலரில் தண்ணீர் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும். ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்டது.
நீர் பற்றாக்குறை வரும் என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அஸ்லம் பாட்ஷா, ஜோதி ராஜன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.