கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் – சுமந்திரன்
கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணை குறித்து அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகேள் விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனும் மூன்று முக்கிய குழுக்களின் தலைவர்களுடனும் அவர் இரண்டு சுற்றுபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ண தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணைக்கான யோசனையை முன்வைக்கவேண்டும் என இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பிச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டிற்கு அரசாங்கத்தினால் வரமுடியுமென்றால் அரசாங்கத்திடம் குறிப்பிட்ட அளவு டொலர் எஞ்சியிருக்கும் என்றும் அதனை மக்களிற்கு எரிபொருள், மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடு காரணமாக அரசாங்கத்தின் சமூக நலன்புரி நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.