ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பலருக்கு இப்தார் விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் ‘பெஹல் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும், பி.சி.டி. மனிதநேய அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஜோகிந்தர் சிங் சலாரியா பல நாடுகளில் பல்வேறு சமூகச் சேவைகளை செய்து வருகிறார். அவ்வகையில், ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பு காலங்களில் பலருக்கு இப்தார் விருந்து அளித்து உபசரித்தும் வருகிறார்.
அவ்வகையில், அபுதாபி நகர சாலையில் கடந்த 18-ம் தேதி சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு 7 வகை சைவ உணவுகளை நெருக்கமாக மேஜைகளில் வைத்து பரிமாறி நோன்பாளிகளுக்கு ‘இப்தார்’ விருந்து அளித்தார்.
உலகின் மிக நீளமான பசியாற்றும் நிவாரணம் என்ற தலைப்பில் இந்த சம்பவம் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.