Main Menu

ஒமைக்ரானை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்- மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

இன்று 84-வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பேசினார். இது இந்த ஆண்டின் கடைசி மன் கீ பாத் நிகழ்ச்சி. 7-வது ஆண்டாக நடந்து வருகிறது. இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியை ஹெலிகாப்டர் விபத்தில் நாம் இழந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்து என் மனதை பாதித்தது.

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் மரணத்தை வெல்ல பல நாட்கள் போராடினார். அவர் கடைசி மூச்சுவரை போராடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர் வருங்கால தலைமுறை மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். பெரிய பதவியில் இருந்தாலும் அவர் பழையதை மறக்காமல் தனது பள்ளி முதல்வருக்கு கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தனது வேர்களையும், கற்றலையும் மறக்கவில்லை. அவர் எழுதிய கடிதத்தில் தனது தோல்விகளையும், மெத்தனத்தையும் கூறியிருந்தார்.

பள்ளியில் நீங்கள் சராசரி மாணவராக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அது ஒரு அளவுகோல் அல்ல. நீங்கள் எதில் பணியாற்றுகிறீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். புத்தகங்கள் நமக்கு அறிவை கொடுப்பதோடு, அது நமது வாழ்க்கையையும் செதுக்குகிறது.

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் இந்தியா ஒரு குடும்பமாக ஒன்றாக நிற்கிறது. ஒரு குடும்பம் போல ஒருவருக்கொருவர் துணை நின்று செயல்படுகிறோம்.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று உலகில் உள்ள தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் நாடு இதுவரை இல்லாத ஒரு பணியை செய்துள்ளது. 140 கோடி டோஸ் தடுப்பூசிகள் என்ற மைல் கல்லை கடந்தது, ஓவ்வொரு இந்தியனின் சாதனை ஆகும்.

சமுதாயத்திற்கான நமது பொறுப்புகளை நிறைவேற்றும் இந்தியர்களின் மன உறுதிக்கு ஒரு சான்றாகும். இது நமது விஞ்ஞானிகளின் புதுமையான ஆர்வத்தையும், மக்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தற்போது நமது வீட்டு (இந்தியா) கதவையும் தட்டி விட்டது.

ஒமைக்ரானை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த சர்வதேச பெருந்தொற்றை வீழ்த்த நாட்டுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் முக்கியம்.

இந்தியாவுக்குள் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து இருப்பதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும்.

ஒமைக்ரானின் மாறுபாட்டை நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய தரவுகளை பெறுகிறார்கள். விஞ்ஞானிகளின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன. நமது கூட்டு சக்தி கொரோனாவை தோற்கடிக்கும்.

புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது கொரோனா வைரசை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.

நீங்கள் 2021-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கவும், 2022-ம் ஆண்டை வரவேற்கவும் தயாராக இருக்க வேண்டும். புத்தாண்டில் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிறுவனமும் வரும் ஆண்டில் சிறப்பாக செயல்பட ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 7 ஆண்டுகளாக மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மேலும் மேலும் நல்லதை செய்யவும், சிறந்து விளங்க சமுதாயம், நாட்டின் நற்குணங்களை எடுத்துரைத்து நமக்கு தூண்டுகோளாக இருந்து வருகிறது.

என்னை பொறுத்தவரை மன் கீ பாத் என்பது அரசாங்கத்தின் பணிகளை முன்னிலைப்படுத்துவது அல்ல. அடிமட்ட அளவிலான மாற்றத்தை உருவாக்குபவர்களின் கூட்டு முயற்சிகளை பற்றியது.

மன் கீ பாத் நிகழ்ச்சியில் அரசின் சாதனைகளை பற்றியும் விவாதிக்க முடியும். நீங்கள் அதை விரும்பி இருப்பீர்கள், பாராட்டி இருப்பீர்கள். ஆனால் ஊடகங்களின் செய்திகளில் இருந்து பலர் வெளியே தெரியாமல் பெரிய நல்ல வி‌ஷயங்களை செய்கிறார்கள் என்பது எனது பல சதாப்த கால அனுபவம்.

அவர்கள் நாட்டின் எதிர்காலத்துக்காக செலவிடுகிறார்கள். வருங்கால சந்ததியினருக்கான தங்கள் முயற்சிகளில் இன்று முழுமனதுடன் உழைக்கிறார்கள். இது மிகவும் ஆறுதல் அளிக்கின்றது. ஆழ்ந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.