ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
அமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் 50 சதவீதம் பேர் போட்டியை காண அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கௌரவமிக்க இந்த தொடரை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இங்கு நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.
நாங்களும் அதே சதவீத எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம். விளையாட்டரங்கிற்குள் இரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.
அமீரக அரசின் தீவிரமான நடவடிக்கையால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம்.
ஐ.பி.எல். தொடருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து விடும். 14 அணிகள் இடையிலான உலக கிண்ண தகுதி சுற்றை கடந்த ஆண்டு நடத்தினோம். இதே போல் இந்த மிகப்பெரிய தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என கூறினார்.
13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.