ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்- அமெரிக்க அதிபர் அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றிரவு எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களையும், நமது கூட்டாளிகளையும் பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க ராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்க்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் விமான தாக்குதல் நடத்தப்பட்டபோது, குரேஷி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்துபோனதாகவும், இதில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.