ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது
ஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சிலர் அவர்களுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 12-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன் உள்பட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
மேலும் முகமது அசாருதீன், இதயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோவை மாநகர போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து 13-ந்தேதி கோவை உக்கடம் அன்பு நகரில் உள்ள ஷாஜகான், வின்சென்ட் ரோட்டில் உள்ள முகமது உசேன், கரும்பு கடையில் உள்ள ஷபியுல்லா ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்கள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இவர்கள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளம் மூலமாக பரப்பி அந்த அமைப்பிற்கு அடிதளம் அமைத்து அதன்மூலம் தீவிரவாத செயல்களை கோவையில் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஷாஜகான், முகமது உசேன், ஷபியுல்லா ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் உபா (சட்ட விரோத செயல் தடுப்புசட்டம்) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை கைது செய்தனர்.
இதையடுத்து ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி 3 பேரையும் வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.