எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரான்ஸ் தீர்மானம்!
பிரான்ஸில், எல்லையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க வருவோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதையடுத்து, பிரான்ஸ் அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
எனினும், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியா மற்றும் ஸ்பெயினுக்குச் செல்வோர், தனிமைப்படுத்தப்படும் வரை, அந்த நாடுகளிலிருந்து வரும் மக்களையும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திவைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி முதல் தளர்த்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 182,584பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 28,367பேர் உயிரிழந்துள்ளனர்.