எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்று படுவோம்- பேரணிக்கு அழைப்பு
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி வேண்டி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி வேண்டி, யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 28.02.2021 ஆம் திகதி அன்று, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நல்லூர் ஆலய வீதியில் ஆரம்பித்தனர்.
அதாவது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல், தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் மற்றும் சுயநிர்ணயம் போன்ற தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்திற்கு மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை கிட்டுப் பூங்காவில் இருந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திடல் வரை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு மாணவர்களாகிய நாம் தீர்மானித்துள்ளோம்.
எனவே தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளை வலியுறுத்துவதற்கான இப் போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
அன்றைய தினம் காலை 10 மணியளவில் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்” என அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.