எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
ஃபஜைரா அருகே எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே நடத்தியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “ஃபஜைரா எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளது. வேறு யாரும் இதை நடத்தியிருக்க முடியாது.
அமெரிக்காவுக்கு வேறு யார் மீதும் சந்தேகம் இல்லை. எங்களுக்கு யார் நடத்தி இருக்கிறார்கள் என்று நன்கு தெரியும். இதில் முக்கியமானது என்னவென்றால் எங்களுக்குத் தெரியும் என்பது ஈரானுக்குத் தெரிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப் பெரிய மையம் உள்ளது. அங்கு கடந்த 13அம் திகதி 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலுக்கு நேரடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், அமெரிக்காவும் மத்தியக் கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியதாக குற்றஞ்சுமத்தின. ஆனால், ஈரான் இதனை உறுதியாக மறுத்துள்ளது.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது.
இதனிடையே, அணுவாயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிற போதும், அதிலுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என அண்மையில் ஈரான் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.