உலகக் கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டனாக கெயில் நியமனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் சிக்சர் மன்னன் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் (வயது 39) மற்றும் ரசல், கேமர் ரோச், ஹெட்மயர், பிராவோ, பிராத்வைட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உலகக் கோப்பையில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை துணை கேப்டனாக நியமனம் செய்ததை, கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் பல்வேறு வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபற்றி கெயில் கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த போட்டியில் விளையாடினாலும் அது எனக்கு கவுரவம்தான். அதிலும் இந்த உலகக் கோப்பை எனக்கு சிறப்பு வாய்ந்த தொடர் ஆகும். ஒரு மூத்த வீரராக, அணியின் கேப்டன் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக அணியின் வெற்றிக்கு பாடுபடுவது எனது பொறுப்பு. அநேகமாக இது மிகப்பெரிய உலகக்கோப்பை தொடராக இருக்கும். அதனால், எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நாம் சிறப்பாக விளையாடுவோம் என்பதை நான் அறிவேன்” என்றார்.
39 வயதான கெயில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 289 ஒருநாள் போட்டிகள், 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 992 ரன்கள் குவித்துள்ளார். 2007 முதல் 2010 வரை சுமார் 90 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ்அணி மே 26 முதல் 28 வரை தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி மே 31-ம் தேதி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.