இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க். இது பிரேசில், உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் இளம் ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லண்டனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரேட்டாவுக்கும், அவரது தலைமையிலான “எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமைகள்” இயக்கத்திற்கும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.
இதுபற்றி கிரேட்டா கூறுகையில், “உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதற்காக போராடுங்கள். இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் இதையே செய்கிறார்கள். இந்த பருவநிலை மாற்றத்தினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் உலகின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள்தான். இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பருவ நிலை மாற்றத்தில் அவர்களின் பங்கு மிகமிக குறைவு. இந்த அநீதிக்கு எதிராகத்தான் நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.
அடுத்து வரும் 12 ஆண்டுகளில் பருவநிலையை சமநிலையில் வைக்க மாசுபடுத்தும் வாயுக்களை கட்டுக்குள் வைக்கவேண்டும் என ஐ.நா எச்சரித்தும் கடந்த ஆண்டு கார்பன் உமிழ்வு இதுவரை இல்லாத அளவை தொட்டது.
சர்வதேச மனித உரிமைகள் ஆதரவு நிறுவனத்தின் பொதுச்செயலாலர் குமி நைடோ கூறுகையில், உங்களது பருவநிலை மாற்றத்தை பற்றிய உங்களது உறுதியான தீர்மானங்களை நாங்கள் மதிக்கிறோம், மற்றும் உத்வேகம் அடைந்துள்ளோம். எங்களின் பலத்தை எங்களுக்கு தெரியவைத்துள்ளீர்கள், காலநிலை பேரழிவிற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார் .